Monday, 24 September, 2018
உன்மாதரோக சிகிச்சை

நிசாதி கிருதம் :- மஞ்சள், மரமஞ்சள், திரிபலை, நன்னாரிவேர், வசம்பு, வெள்ளைக்கடுகு, பெருங்காயம், காட்டுவாழைப்பட்டை வாலுளுவை அருசி, சுவேதகாஞ்சனம், மஞ்சிஷ்டி, திரிகடுகு, தேவதாரு இவைகளை சமஎடையாய் கோமூத்திரத்தில் போட்டு அதற்குச் சமம் நெய் கலந்து கிருதபக்குவமாய் காய்ச்சி குடித்தால் உன்மாத ரோகம் நிவர்த்தியாகும்.

பூதோன்மாதத்திற்கு பிரான்ஹீ கிருதம் :- முருங்கன்பட்டை ரசம் 64 பலம், நெய் 32 பலம், சுத்திசெய்த சிவதைவேர், வெள்ளை நாகதந்தி, திரிகடுகு, கொன்னைப்பட்டை, வாய்விளங்கம் இவை  வகைக்கு 1/4 பலம் விகிதம் சூரணித்து நெய்யில் கலந்து 1 பலம் முதல் 2 பலம் வரையிலும் நோயின் வன்மைக்கு தகுந்தபடி பிரதி தினம் பானஞ்செய்தால் பூதோன்மாதம் அபஸ்மாரம் இவைகள் நிவர்த்தியாகும்.


ஹிங்குவாதி கிருதம் :- பெருங்காயம், சவ்வர்ச்சலவணம், திரிகடுகு இவைகள் வகைக்கு 5 பலம் விகிதம் இடித்துச் சூரணித்து நெய் 64 பலம் கூட்டி நெய்யின் எடைக்கு நான்கு பாகம் அதிகமாய் கோமூத்திரத்தைக்கலந்து கிருதபக்குவமாய் காய்ச்சி சாப்பிட்டால்  பூதோன்மாதம் அபஸ்மாரம் பிரம்பராக்ஷசு இவைகள் நிவர்த்தியாகும்.

சாரஸ்வத கிருதம் :- வெள்ளைக்கண்டங்கத்திரி, போயாவரை, மஞ்சிஷ்டி, நன்னாரிவேர், வசம்பு, முருங்கன்வேர், வட்டத்திரிப்பி, முள்ளங்கத்திரி, சிற்றாமல்லி, நிலக்கடம்பை, வெள்ளைச்சாரணை, சகதேவி, சூரியகாந்தி, நெல்லிவற்றல் இவைகளை  வகைக்கு 1 பலம் வீதம் நான்கு படி நீர் விட்டு நாலில் ஒரு பங்கு மீறும் படியாய் கியாழம் சுண்டக்காய்ச்சி, வடிகட்டி அதில் கிரந்தி தகரம் காட்டுமிளகு, வசம்பு, கோஷ்டம், திப்பிலி, இந்துப்பு இவைகளை சூரணித்துப்போட்டு நோயில்லாத கண்ணுடன் இருக்கும் பசும் பாலை ஒருபடி யளவிற்குச் சேர்த்து அதில் 64-பலம் நெய் கலந்து பூச நக்ஷத்திரத்தில் காய்ச்சி மண்பாத்திரத்தில் வைத்து உபயோகித்து வந்தால் மேதை, ஆயுசு, புஷ்டி இவைகள் விருத்தியாகும். ராக்ஷசபீடை, விஷம், உன்மாதம் இவைகள் நிவர்த்தியாகும்.

லசுண கிருதம் :- தோல்நீக்கிய வெள்ளைப்பூண்டு 50-பலம், தசமூலம் 25-பலம், இவைகளை 64-பலம் ஜலத்தில் கலந்து நாலில் ஒருபங்கு மீறும்படியாய்ச் சுண்டக் கியாழம்காய்ச்சி அதில் 16-பலம் நெய், வெள்ளைப்பூண்டு ரசம் 16-பலம், இலந்தை, நெல்லிக்காய் கொடிமாதுளம்பழம், இஞ்சி இவைகளின் ரசங்கள், மாதுளம், கள், தயிர்மீதுதேட்டை, காஞ்சிகம் இவை யாவையும் 8-பலம் விகிதம் சேர்த்து கிருதபக்குவமாய் காய்ச்சி அதில் திரிபலை, தேவதாரு, லவணம், மிளகு, ஓமம், குரோசாணிஓமம், செவ்வியம், பெருங்காயம், கொன்னைப்புளி இவைகளில் கற்கத்தை தனித்தனி 1/2-பலம் விகிதம் சேர்த்து காய்ச்சி சாப்பிட்டால் சூலை, குன்மம், மூலவியாதி, காய்ச்சல், விரணம், பாண்டு, பிலீஹை, யோனிதோஷம், கிருமி, வாதசிலேஷ்மரோகம், உன்மாதம் இவை யாவும் நிவர்த்தியாகும்.

பூதோன்மாதத்திற்கு விஜயகிருதம் :- பொட்டு எடுத்த ஓமம், பேய்ப்புடல், பற்பாடகம், திப்பிலி, இஞ்சி இவைகள் வகைக்கு பலம்-5 சூரணித்து அதில் முருக்கன்ரசம் 8-பலம், நெய் 16-பலம், திரிபலை, திரிகடுகு, வெட்டிவேர், வெள்ளைப்பூண்டு, பஞ்சகோலங்கள் இவைகளின் சூரணம் வகைக்கு 1/8-பலம் கலந்து கிருதபக்குவ மாய் காய்ச்சி அக்கினி பலத்திற்கு தக்கபடி சாப்பிட்டால் பூதோன் மாதம், அபஸ்மாரம், வாதபித்த கபதொந்த சந்நிபாத விஷமசுரங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

உன்மத்தாதி நசியம் :- வேங்கைமரவிரை, கார்போக அரிசி, வெள்ளைகாக்காட்டான்வேர், நொச்சி ஈர்க்கு இவைகளில் எதையாகிலும் அரைத்து காதில் வைத்துக்கொண்டால் அபஸ்மாரம் நிவர்த்தியாகும்.

உன்மாதரோகிக்கு பாதம்முதல் சிரசுவரையில் வேப்ப எண்ணெயை தடவவேண்டியது. ஜடான்னம், பாயசம் இதுகளை புசிக்கும்படி செய்யவேண்டியது. உலர்ந்த காய்கறிகளை கொடுக்கக் கூடாது உன்மாதரோகம் நிவர்த்தியாகுமளவு மிகவும் ஜாக்கிரதையாக பாதுகாக்கவேண்டியது. இரவில் மஹேசுரதூபம் போட வேண்டியது.

பிறாஹ்மியாதி நசியம் :- பிரம்மதண்டி, சுக்கு, வசம்பு, கோஷ்டம், கரும்அல்லி, இந்துப்பு, திப்பிலி இவைகளை சமஎடையாகச்சூரணித்து முறுக்கன் ரசத்தினால் ஏழுநாள் அரைத்து வெண்ணெயில் கலந்து கிருதபக்குவமாக காய்ச்சி நசியம் செய்தால் உன்மாதம், அபஸ்மாரம் இவைகள் நிவர்த்தியாகும்.


உன்மாதரோகத்திற்கு பத்தியங்கள் :- கோதுமை, பச்சைப்பயறு, பழைய சிகப்பு நெல், நூறு முறை கழுவியநெய், பழைய நெய், ஆமைமாமிசரசம், பேய்ப்புடல், வல்லாரை, பிரமிய வழுக்கை சிறுகீரை, திராக்ஷ, விலாம்பழம், பலாப்பழம், எலுமிச்சம்பழம், நெல்லிக்காய் இவைகள் உன்மாதரோகிற்கு பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- கள், விருத்த அன்னம், உஷ்ணபதார்த்த பக்ஷணம், நித்திரை, பசி, தாகம், இவைகள் வேகத்தை அடக்கல், கசப்பான பதார்த்தங்கள், காரமான பதார்த்தங்கள் இவைகளை உன்மாதரோகி நிவர்த்திக்கவேண்டியது.